Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம்
கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம்
பத்ரி - திரைப்பட விமர்சனம்
சினிமா கற்பித்த பாடம்
ஏலேலோ ஐலசா
திரையுலக வரலாற்றில்......
கலைஞரின் வசன மழைகள்
- ரா. சுந்தரமூர்த்தி|ஜூன் 2001|
Share:
Click Here Enlargeஜூன்3 கலைஞர் மு. கருணாநிதி பிறந்தநாள்

'அபிமன்யு'வில் திரையில் பெயர் வரவில்லை என்றாலும் அவரது உழைப்பு வீண் போகவில்லை. 1950 -ல் அடுத்த வாய்ப்பு வந்தது. அந்த ஆண்டு கலைஞர் கதை, வசனத்தில் இரண்டு படங்கள் வெளிவந்தன.

1. கோவிந்தன் கம்பெனி தயாரித்த 'மருத நாட்டு இளவரசி'. இதில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் வி.என். ஜானகி கதாநாயகி யாகவும் நடித்தனர். ஏற்கனவே அந்தப் படத்திற்கு கதை, வசனம் எழுத ஒப்புக் கொண்டிருந்தவர் இழுத்தடித்ததால் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. கலைஞரை நேரில் கண்ட தயாரிப்பாளர் முத்துசாமி. 'இந்த சிறு பையன் படத்திற்கு வசனம் எழுத முடியுமா?' என முதலில் தயங்கினார். இருந்தாலும் கலைஞருக்கே வாய்ப்பு அளித்தார். படத்திற் கான முழு வசனத்தை கலைஞர் ஒரே வாரத்தில் எழுதிக் கொடுத்தார்.

2. மாடர்ன் தியேட்டர்ஸின் 'மந்திரி குமாரி'. 'மந்திரி குமாரி' முதலில் நாடகமாக நடத்தப் பட்டது. அதைத் தஞ்சாவூரில் பார்த்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் படமாக எடுக்க விரும்பினார். நாடகத்திற்கு வசனம் எழுதிய கலைஞரே படத்திற்கும் திரைக்கதை, வசனம் எழுதினார்.

மந்திரி குமாரி தயாரானபோது, "இந்தப் படம் ஓடாது. பண்பாட்டுக்கு எதிரானது. மனைவியே கணவனைக் கொல்வது ஏற்க முடியாத ஒன்று" என்று பேசினார்கள். ஆனாலும் படம் பெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தில் வரும் 'எருமைக் கன்னுக்குட்டி' என்ற பாடல் கலைஞரே எழுதியது.

மாடர்ன் தியேட்டர்ஸின் அடுத்தப் படமான 'தேவகி' க்கும் கலைஞர் வசனம் எழுதினார். அடுத்து கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்த 'மணமகள்' படத்திற்கு வசனம் எழுதினார்.

இதற்கு அடுத்த படம்தான் 'பராசக்தி' . இது பாவலர் பாலசுந்தரத்தின் நாடகம் என்றாலும், திரைக்கு வந்த போது கலைஞரின் கைவண்ணம் தான் இதில் மேலோங்கி இருந்தது.

கதைக்காக சம்பவங்கள், சம்பவங்களை விளக்க வசனம் என்ற நிலையை மாற்றிப் போட்டு, 'பராசக்தி' யில் வசனத்திற்காக சம்பவம், சம்பவத்திற்காக கதை என்ற தலைகீழ் நிலையை ஏற்படுத்தியது கலைஞரின் சிந்தனை யோட்டம், எழுத்து, ஆற்றல்.

600 அடிகளில் முடிந்திருக்க வேண்டிய நீதிமன்றக் காட்சியை 2000 அடிகளில் எடுக்க வைத்த பெருமை கலைஞரின் வசன வலிமை யையே சாரும்.

சிங்கத் திருநாடே நீ சிலந்திக் காடாக மாறியது எப்போது?
வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே... நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக?

வீரப்பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே நீ வீதி களிலே விபச்சாரிகளைத் திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்? ஏன்?

வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்! தாழ்ந்த உள்ளங்கள்!

.... நான் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக.

பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

..... 'பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது . ஓடினாள்.... ஓடினாள்..... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்'. என்ற வசனங்களுக்குக் கிடைத்த கைத் தட்டல்கள் கலைஞரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது. என்றாலும் இந்தப் படத்தை அரசியல் ரீதியாகப் பார்த்து, குறை கூறியவர்களும் ஒரு சிலர் இருந்தனர். படத் தைத் தடை செய்யக் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

அதனால் பராசக்தி மீண்டும் தணிக்கையாளர்களின் பார்வைக்குச் சென்றது. மீண்டும் பார்த்துவிட்டு ஆட்சேபகரமாக எதுவுமில்லை என்று கூறினார்கள் தணிக்கைக் குழுவினர். அதன் பிறகு படம் பெற்ற வெற்றிக்கு அள வில்லை.

1953 -ல் எம்.ஜி.ஆர்., பி.எஸ். வீரப்பா, கலைஞர் மூவரும் பங்குதாரர்களாகி 'மேகலா பிக்சர்ஸ்' நிறுவனத்தை உருவாக்கினர். அதன் மூலம் 'நாம்' என்ற படத்தை தயாரித்தனர்.

சினிமாவுக்கு வசனம் மட்டுமே எழுத வந்த கலைஞர் பின்னாளில் தனது தமிழறிவால் மற்ற பரிணாமங்களையும் கண்டார். கதை, திரைக் கதை, வசனம், பாடல் எல்லாமும் எழுதினார். சில ஆண்டுகளில் வெற்றிகரமான தயாரிப்பாளராக ஆனார். முதலில் கூட்டுத் தயாரிப்பில் 'மேகலா பிக்சர்ஸ்' சார்பில் படம் எடுத்தவர், பின்பு 'பூம்புகார் புரொடக்ஷன்ஸ்', 'அஞ்சுகம் பிக்சர்ஸ்' உள்பட பல பேனர்களில் படம் எடுத்தார்.

திரைக்கதையில், வசனத்தில், பாடல்களில் பல புதுமைகளை, புரட்சிகளைப் புகுத்தியவர் கலைஞர். வித்தியாசமான கோணம், ஆழ்ந்த சிந்தனை, சமூக நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது, ஆட்சியாளர்களின் அலட்சியம், அதிகாரவர்க்கத்தின் மமதை, ஏழை, எளிய மக்கள் படும்பாடு என்று எல்லாவற்றையும் தனது தமிழ்ப் புலமையால், வீரியமிக்க வசனத்தால் அம்பலப்படுத்தினார் கலைஞர்.

சினிமாவில் கதாநாயகனை, கதாநாயகி 'நாதா' என்றும் 'சுவாமி' என்றும் அழைத்து வந்ததை மாற்றி 'அன்பே' என்றும் 'அத்தான்' என்றும் அழைக்க வைத்தவர் கலைஞர்தான் என்பது பலரின் கருத்து.

மந்திரி குமாரி போல், பராசக்தி போல், கலைஞருக்குப் பெரும்புகழ் தந்த படங்களில் 'மனோகரா' வுக்கு முக்கிய இடம் உண்டு.

முன்பு கலைஞர் வசனம் எழுதிய 'அபிமன்யு' படத்தை எடுத்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் 'மனோகரா' படத்தை எடுத்தது.

முன்பு வசனத்தில் பெயர் போட மறுத்த தயாரிப்பாளர் இப்போது தேடிக்கொண்டு வந்து வாய்ப்பைக் கொடுத்தார்.

மனோகரா மகத்தான வெற்றிப் பெற்ற படம். திரையில் மட்டுமல்ல, வேறு ஒரு சாதனையும் படைத்தது. முதன்முதலில் ஒரு சினிமா, கதை, வசனம் புத்தகமாக வெளிவந்தது என்றால் அது 'மனோகரா' படத்திற்குதான். அந்தப் புத்தகம் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. மனோகரா சினிமா குறித்து எழுத்தாளர் கல்கி விமர்சனம் எழுதினார்.

அதில் 'சொற்பிரவாகம்', 'சொல் வெள்ளம்', 'சொற்பிரளயம்', 'சொல்சண்ட மாருதம்' என்றெல்லாம் சொன்னாலும் திருப்தி உண்டாகவில்லை. சொல்குண்டு மழை, அணுகுண்டு சொல் மாரி, எரிமலைச் சொற் பொழிவு என்றெல்லாம் சொல்லக்கூடிய விதமாக மனோகரன் தீப்பொறி பறக்கும் காரசாரமான சொற்களைக் கொட்டித் தீர்க்கிறான். தமிழ் மொழியை எவ்வளவு வன்மையாகக் கையாள முடியும் என்பதற்கு மனோகரனின் ராஜசபைப் பேச்சு நல்ல எடுத்துக்காட்டு' (கல்கி - 1954).

1956 இல் கலைஞரின் ராஜா ராணி படத்தில் உள்ளே ஏகப்பட்ட நாடகங்கள் இருந்தன. இதுவும் ஒரு புதுமை. சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் நாடகங்களை அதில் சேர்த்து இருந்தார்.

அறிஞர் அண்ணாவின் நாவலுக்கு, கலைஞர் வசனம் எழுதியது 'ரங்கோன் ராதா' படத்திற் காக. பின்பு 'வண்டிக்காரன் மகன்' படத்திற்கும் எழுதினார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு கலைஞர் இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்குக் கதை, வசனம் எழுதியுள்ளார். அதில் வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி, நீதிக்குத் தண்டனை, பாலைவன ரோஜாக்கள் ஆகியனவும் அடங்கும்.

கலைஞரின் வசனத்தில் எம்.ஜி.ஆர். - 10, சிவாஜி - 12, எஸ்.எஸ்.ஆர். - 10 படங்களில் நடித்துள்ளனர்.

அரசியலுக்கு வந்தபின் கலைஞர் - எம்.ஜி.ஆர். உறவில் விரிசல் விழுந்தாலும் சினிமா துறையில் அவர்கள் ஆத்ம நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

'எங்கள் தங்கம்' எம்.ஜி.ஆர். நடித்து, கலைஞ ரின் நிறுவனம் தயாரித்த படம். அதில் ஒரு பாட்டு

"நான் செத்துப் பிழைச்சவன்டா,
எமனைப் பார்த்து சிரிச்சவன்டா"
என்ற பல்லவியுடன் துவங்கும்.

சரணத்தில்,

"ஓடும் ரயிலை இடைமறித்து - அதன்
பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து
தமிழ் பெயரைக் காத்த கூட்டமிது ...."

என்று கலைஞரின் கல்லக்குடி போராட்டத்தை நினைவு கூரும் வரிகள். இது எம்.ஜி.ஆரே வாலியிடம் சேர்க்கச் சொல்லி எழுதியது.

அதுபோல் அதே படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்' என்று ஒரு பாடல் வாலி எழுதிய போது, அடுத்த வரியாக 'எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்று போடலாமே என்று கலைஞர் சொன்னார்.

கலைஞர் எதையும் தன் கையாலே எழுதுவார். எழுத உதவியாளர் வைத்துக் கொள்வதில்லை. அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதுவார். அவரது கைப்பிரதி கண்ணில் ஒற்றிக் கொள் ளலாம் போல், அழகாக இருக்கும். நன்றாக இடம் விட்டுக் காட்சியை எப்படிப் படமாக்கலாம் என்ற யோசனைகளையும் சிறு குறிப்பாக எழுதுவார். சில சமயம் சித்திரம் வரையவும் செய்வார்.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே முழு வசனத் தையும் எழுதி முடித்து விடுவார். நடுவில் வந்து மாற்றம் செய்யவோ எழுதிக் கொடுப்பதோ கிடையாது. வசனம் எழுதும் போதே சப்தம் வெளியே வராமல் உச்சரித்தபடி எழுதுவது அவரது வழக்கம்.

பயணங்களின் போதும் இடைவிடாது எழுது வார். இரயிலின் குலுக்கல் அவரது எழுத்து அழகைப் பாதிக்காது. நீதிக்குத் தண்டனை, வீரன் வேலுத்தம்பி ஆகிய படங்களுக்கு ஜெயி லில் இருந்த போது கதை வசனம் எழுதினார்.

கலைஞரின் கதை போல், வசனம் போல் பாடல் களும் அற்புதமாய் இருக்கும். 'மறக்க முடியுமா?' படத்தில் இடம் பெற்ற

'காகித ஓடம் கடல் அலை மீது
போவதுபோலே மூவரும் போவோம்.
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் - அதுபோல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்'

பாடல் எழுதிய சூழல் வித்தியாசமானது. பாடலும் வித்தியாசமானது. இந்தப் பாடலை யார் தான் மறக்க முடியும்?

திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தவாக, கவிஞராக புகழ் கொடி நாட்டிப் பொன்விழா கண்டவர் கலைஞர் மட்டுமே. கலைஞர் திரையுலக வாழ்வில் 50 ஆண்டுகளை எட்டிப் பிடித்ததற்காக அவருக்கு சென்னைக் கடற் கரையில் திரையுலகினர் சார்பில் பொன் விழாவை நடத்தினர். அதில் அவருக்கு ஆளுயரப் பேனாவும், தங்கப் பேனாவும் தரப்பட்டது.

1998 ஆம் ஆண்டில் மீண்டும் திரையுலகினர் கலைஞரின் பவள விழாவினையொட்டி பிர மாண்ட விழாவை ஏற்பாடு செய்து ஆளுயர வெள்ளிச் சிலையைப் பரிசாக அளித்தனர். நீண்டநாள் பிரிந்திருந்த சிவாஜிகணேசனையும், கலைஞரையும் இணைத்து வைக்கும் பாலமாக இவ் விழா அமைந்தது.

நாத்திகரான கலைஞர் நம்ப மறுத்தாலும் அவர் நாவில் சரஸ்வதி குடியிருக்கத்தான் செய்கிறாள்.

ரா. சுந்தர மூர்த்தி
More

ஜூன் ஜூலை - திரைப்பட விமர்சனம்
கடல்பூக்கள் - திரைப்பட விமர்சனம்
பத்ரி - திரைப்பட விமர்சனம்
சினிமா கற்பித்த பாடம்
ஏலேலோ ஐலசா
திரையுலக வரலாற்றில்......
Share: 




© Copyright 2020 Tamilonline