Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ
- ஹரி கிருஷ்ணன்|அக்டோபர் 2017||(2 Comments)
Share:
பாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய இடத்தில் பதினைந்து இருபது சொற்களைப் பயன்படுத்தமாட்டார் வியாசர். அதுவும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிற கட்டத்தைப் போன்ற திருப்புமுனையான இடங்களில் பீஷ்மர் போன்ற பெரியோர் பேசும் சொற்கள் உணர்ச்சிக் கலப்பற்று நேரடியாக அறிவின் தளத்திலிருந்து பாய்வதைப் போலிருக்கும். (அப்படியே இருந்தாலும் அவர் இந்தக் கட்டத்தில் தடுமாறத்தான் செய்கிறார் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்).

இங்கே என்ன சொல்லப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்வதற்கே பெருமுயற்சி தேவைப்படும். அந்தந்தப் பாத்திரங்கள் பேசும் சொற்களுக்குக் கூடுதலாக—சந்தர்ப்ப சூழல்களின் துணையுடன்—சில சொற்களைச் சேர்த்துக்கொண்டும்; வேறு மொழிபெயர்ப்புகளோடு ஒப்புநோக்கியும் பார்த்தால்தான் சொல்லப்படும் கருத்து என்ன என்பது பிடிபடும். இப்படிச் சேர்க்கின்ற சொற்களில் நம்முடைய சொந்தக் கருத்தின் சாயல் பிரதிபலிக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்த்துச் சேர்க்கவேண்டியது வாசகனின் கடைமையாகிறது. சென்ற இதழில் பீஷ்மரின் பேச்சுக்கு இன்ன பொருள் என்று நாம் இடையே புகுந்து விளக்கியது அப்படிப்பட்ட விளக்கமே. அவருடைய பேச்சை இங்கே இன்னொருமுறை பார்ப்போம்:

"பாக்கியமுள்ளவளே! தனக்குத்தான் சுதந்திரமில்லாதவன் அயலானுடைய பொருளைப் பந்தயம் வைக்கமுடியாது என்பதையும்; பெண்ணானவள் கணவனுக்குட்பட்டவள் என்பதையும் பார்க்கும்போது, தர்மம் அறியக்கூடாது இருப்பதனால் நீ கேட்ட இந்த கேள்விக்குச் சரியாகப் பகுத்து மறுமொழி சொல்ல என்னால் முடியவில்லை. யுதிஷ்டிரன் செல்வம் நிறைந்த பூமியனைத்தையும் விட்டாலும் விடுவானேயன்றித் தர்மத்தை விடான். நான் ஜயிக்கப்பட்டேன் என்று அவனே சொன்னான். அதனால் இதில் ஒரு நிச்சயமும் என்னால் சொல்ல முடியவில்லை. சகுனி சூதாட்டத்தில் மனிதர்களுக்குள் ஒப்பற்றவன். குந்தி புத்திரனாகிய யுதிஷ்டிரன் அவனால் இஷ்டப்படி விடப்பட்டான். அந்த வஞ்சகத்தை யுதிஷ்டிரன் அறியவில்லை. அதனால் உன் இந்தக் கேள்விக்கு நான் மறுமொழி கூறாமல் இருக்கிறேன்' என்று சொன்னார்". ஸபா பர்வம், த்யூத பர்வம், அத். 89; பக். 286).

பீஷ்மருடைய பேச்சைப் பின்வருமாறு பகுத்துக்கொள்ளலாம். (1) தனக்குத்தான் சுதந்திரமில்லாதவன் அயலானுடைய பொருளைப் பந்தயம் வைக்கமுடியாது. அதாவது தருமபுத்திரன் அடிமையான பின்னரும் ஆட்டம் தொடர்ந்திருக்கிறது. அப்போதும் அவன் பந்தயமாக ஒரு பொருளை வைக்கிறான் என்றால் அது இன்னொருவருக்குச் சொந்தமான பொருளாக இருக்கமுடியாது. (2) பெண்ணானவள் கணவனுக்குட்பட்டவள். அதாவது கணவன் செய்யும் தருமச் செயல்களுக்கு மட்டுமேயல்லாமல், அறத்துக்குப் புறம்பான செயல்களுக்கும் மனைவி கட்டுப்பட்டவள். ஆகவே பாஞ்சாலி வெல்லப்பட்டிருக்கிறாள்; அடிமையாயிருக்கிறாள் என்றுதான் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வரும் பிதாமகர் circumstantial evidence இன்னொன்றை உருவாக்கித் தன் வாதத்துக்குத் துணை தேடிக்கொள்கிறார்.

என்ன சொல்கிறார் பாருங்கள்: யுதிஷ்டிரன் செல்வம் நிறைந்த பூமியனைத்தையும் விட்டாலும் விடுவானேயன்றித் தர்மத்தை விடான். நான் ஜயிக்கப்பட்டேன் என்று அவனே சொன்னான். அதாவது, 'தருமபுத்திரன் தனக்குப் பெரிய லாபங்கள் கிடைத்தால்கூட அறத்துக்குப் புறம்பான காரியம் ஒன்றைச் செய்யமாட்டான். அவனே இப்படிச் செய்திருக்கிறான் என்றால் அதைத் தவறு என்று மறுத்துப் பேச என்னால் இயலவில்லை'. (3) அதற்குமேல் தருமபுத்திரன் தானே முன்வந்து 'நான் வெல்லப்பட்டேன்' என்று சொன்னான். அதாவது, அவன் எப்போது வெல்லப்பட்டவன் ஆகிறானோ அப்போதே நீயும் வெல்லப்பட்டவள் ஆகிறாய். (4) இந்தச் சூழ்நிலையிலும் தருமபுத்திரனுக்கு சந்தர்ப்பம் தரப்பட்டது. அவன் தன்னுடைய விருப்பத்தின்படி விடப்பட்டான். அதாவது, தருமபுத்திரன் உன்னை வைத்து ஆடியது அவனுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே. எனவே, எந்த சுயலாபத்துக்காகவும் அறத்தைக் கைவிடாத அவனே இப்படிச் செய்திருக்கிறான் என்றால் அவன் செய்தது தருமம் என்றுதான் பொருள். ஏனெனில், தருமன்தான் எந்த லாபத்துக்காகவும் தருமத்தைக் கைவிடாதவன் ஆயிற்றே!

எனவே தருமன் (1) 'தனக்குரிய பொருளையே' ஆட்டத்தில் வைத்தான்; (2) அவனோ தருமத்தைக் கைவிடாதவன்; (3) மனைவி, கணவனுக்குக் கட்டுப்பட்டவள்; (4) தருமனே 'நான் வெல்லப்பட்டேன்' என்று சொன்னான். ஆகவே நீயும் வெல்லப்பட்டிருக்கிறாய். (5) தருமபுத்திரன் உன்னைத் தன் மனமொப்பியே பணயம் வைத்தான். (6) ஆனாலும் தர்மம் வெகுநுட்பமாக இருப்பதால் 'என்னால் எதையும் பகுத்துக் கூற முடியவில்லை. எனக்கு எதுவும் தெரியாது, நான் ஒன்றும் அறியேன். சாந்திபர்வத்தில் தருமனுக்கு அரசுமுறைமைகளை விளக்குவதற்காகக் கண்ணனே இவரைத்தான் மிகவும் தகுதிவாய்ந்தவராக நியமிக்கிறான். அந்த சந்தர்ப்பத்தில்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் எழுகிறது என்பதையெல்லாம் அறிந்த நமக்கோ இந்தக் கட்டத்தில் இவருடைய மனம் முன்னும் பின்னுமாக ஊசலைப்போலத் தடுமாறுவதைக் காண வியப்புத்தான் மேலிடுகிறது.
அது ஒருபுறமிருக்கட்டும். சிக்கலான இந்தப் பொருளை எப்படி அடைந்தோம் என்பதை விளக்குவதற்காக விரித்திருக்கிறேனே ஒழிய என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு எள்முனையேனும் இடம் கொடுக்கவில்லை. இதை கிஸாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒப்பிட்டுப் பார்த்தே இந்தச் சாரத்தைத் தந்திருக்கிறேன். "The son of Pandu hath said—'I am won.' Therefore, I am unable to decide this matter. Sakuni hath not his equal among men at dice-play. The son of Kunti still voluntarily staked with him. The illustrious Yudhishthira doth not himself regard that Sakuni hath played with him deceitfully. Therefore, I can not decide this point." என்பது அவருடைய மொழிபெயர்ப்பு. இந்தக் கட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் பார்க்க: www.sacred-texts.com/hin/m02/m02066.htm

பீஷ்மருடைய பேச்சுக்கு ஒரு எளிய மறுப்பிருக்கிறது. கன்னிகா தானம் என்று தரும்போது பெண்ணின் தந்தை ஒருவனுடைய சுக-துக்கங்களில் பங்கேற்று, தருமங்களில் கைகொடுப்பதற்காகத் தருகிறார். அப்படிப் பெற்றுக்கொண்டவன் எவனோ அவன் அடிமையாகிவிட்டபோது, அவனுக்குத் தன் மனைவியின் மீதுள்ள உரிமை போய்விடுகிறது. அவள் அந்த நிமிஷமே தன் தந்தையால் பாதுகாக்கப்படுவதற்கு உரியவள் ஆகிறாள். தந்தை உயிரோடு இல்லாதபட்சத்தில் மகன் பாதுகாவலன் என்ற நிலைக்கு வந்துவிடுகிறான். தருமன் தன்னையும் தன் சகோதர்களையும் எப்போது அடிமையாக்கிக் கொண்டானோ, அந்த நிமிஷத்திலேயே 'கன்யா தானமாக' வந்த அந்தப் 'பொருள்' இப்போது தகப்பனான துருபதனுடைய பாதுகாப்புக்கு உரியதாகிவிடுகிறது. ஆகவே இவர் பேச்சில்—இந்தக் கட்டத்திலே—வெளிப்படுவது தடுமாற்றம் மட்டுமே. மிகச்சிறிய, ஆனால் ஆழமான கருத்துகளை உடைய இந்தச் சொற்கோவையை எளிதில் உள்வாங்கிக்கொண்டு அவள் பேசுகின்ற சொற்களை எழுத்து மாறாமல் முன்வைக்கிறேன்:

"சூதில் தேர்ந்தவர்களும் அயோக்கியர்களும் கெடுநினைவுள்ளவர்களும் சூதிலேயே ஊக்கமுள்ளவர்களுமான மோசக்காரர்கள் அதிக ஜாக்கிரதையெடுத்துக் கொள்ளாத ராஜாவைச் சபையில் அழைத்தபிறகு அவர் இஷ்டப்படி விடப்பட்டவராவது எப்படி? கெட்ட எண்ணத்துடன் மோசத்துக்கே ஆரம்பித்த எல்லோரும் சேர்ந்து மோசம் அறியாதவரும் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சிரேஷ்டருமான தர்மராஜரை ஜயித்த பிறகுதான் அவர் இந்தப் (*) பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டார். தங்கள் பெண்களுக்கும் மருமகளுக்கும் அதிகாரிகளாய் உள்ள இந்தக் கௌரவர்கள் சபையில் இருக்கின்றனர். நீங்களெல்லாரும் இந்த என் கேள்வியை ஆராய்ந்து பார்த்துச் சரியான மறுமொழி கூறுங்கள்". (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத். 89; பக். 287) (*) இந்த இடத்தில் 'கைதவம்' என்ற சொல் மூலத்தில் ஆளப்பட்டிருப்பதாக அடிக்குறிப்பு சொல்கிறது. 'கைதவமோ அன்றிச் செய்தவமோ' என்பார் அபிராம பட்டர். அது இங்கே அப்படியே பொருந்துகிறது.

பாஞ்சாலி மேலும் தொடர்கிறாள்: பெரியோர்கள் இல்லாதது சபையன்று; தர்மத்தை உரையாதவர் பெரியோர்களும் அல்லர்; உண்மையில்லாதது தர்மமுமன்று; கபடம் சேர்ந்தது உண்மையுமன்று. இந்தப் பிற்பகுதி அப்படியே எழுத்துக்கு எழுத்து பீஷ்மரின்மேல் வைக்கப்படும் விமர்சனம்; குற்றச்சாட்டு,

இந்தப் பகுதியையும் மேலும் விளக்கவேண்டியிருக்கிறது. அதை அடுத்தமுறை செய்வோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline