Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
ஜவ்வாது
கத்தி
நான் கண்ணாடியை மாத்திட்டேன்
- S.L.V. மூர்த்தி|மே 2017||(1 Comment)
Share:
நாகர்கோவிலிலிருந்து மெளன்டன்வியூ வந்து இன்றைக்கு இரண்டு மாதமாகிறது. ஆனால், இருபது வருடங்கள் ஆனதுபோல் மன இறுக்கம். அறுபதே நாளில் எப்படித் தலைகீழாக என் வாழ்க்கை மாறிவிட்டது?

பிறந்தது முதல் அறுபத்தைந்து வருடங்கள் நாகர்கோவில் ஒழுகினசேரி கிராமத்தில். காலை எழுந்திருப்பது, பழையாற்றில் குளியல், சேது லட்சுமிபாய் பள்ளிக்கூடத்தில் படிப்பு, லாலாக்கடை அல்வா, சங்கர அய்யர் ஹோட்டல் ரசவடை, லட்சுமி தியேட்டர் தரை டிக்கெட் சினிமா என்று சிறுவயது வாழ்க்கை. அப்புறம் மணிமேடை ஜங்ஷனில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் கிளார்க் வேலை. மாமா மகள் சரோஜாவோடு கல்யாணம். கறிவேப்பிலைக் கொழுந்தாக மகன் மணி. படிப்பில் படு சுட்டி. சென்னை ஐ.ஐ.டி.யில் எஞ்சினீயரிங் படித்தான். அமெரிக்காவில் மேற்படிப்பு. அங்கேயே தங்கிவிட்டான். தங்கமான பையன். நாங்கள் பார்த்துவைத்த தூரத்து சொந்தக்காரப் பெண் கலாவோடு திருமணம். இரண்டு பேரும் கூகிள் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஆதித் என்று நான்கு வயது மகன், இரண்டு வயது மகள் ஆத்யா. இருவரும் டே கேர் போகிறார்கள்.

மணி குடும்பத்தோடு வருடாவருடம் எங்களைப் பார்க்க வருவான். ஒவ்வொரு தடவையும், அவனும், கலாவும் அமெரிக்காவுக்கு வரும்படி சொல்லுவார்கள். சரோஜா அழகாகப் பதில் சொல்லுவாள், "நீங்க செடியாக இருக்கறப்ப அமெரிக்கா போய்ட்டீங்க. அங்கே வேரூன்ற முடிஞ்சுது. நாங்க மரம்டா, அறுபது வயசு மரம். எங்களைப் பிடுங்கி நடாதே. இந்த ஊரைவிட்டு எங்களால் வரவே முடியாது."

மகராசி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அவளால் முடிந்தது. இந்த வருஷம், அவளுக்கு அறுபது வயசுப் பிறந்த நாள். நாகராஜா கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பினோம். அசதியாக இருக்கிறது என்று படுத்தாள். நெஞ்சு வலித்தது. என் மடியில் படுத்துக்கொண்டே போய்விட்டாள். "நாம் யாருக்குமே கெடுதல் நெனைச்சது கிடையாது. அதனால், நமக்கு அநாயச மரணம்தான் வரும் உங்களுக்கு அப்புறம்தான் நான் போகணும். ஏன் தெரியுமா? காப்பிகூட உங்களுக்குப் போடத் தெரியாது, திண்டாடித் திணறிடுவீங்க" என்று அடிக்கடி சொல்லுவாள். அவள் பாதிப் பிரார்த்தனை பலித்துவிட்டது. அநாயசமாகப் போய்விட்டாள். நான் மாட்டிக்கொண்டேன்.

மணி வந்தான். காரியங்கள் முடிந்தன.

"அப்பா, நீங்க எங்களோட அமெரிக்கா வர்றீங்க."

"நான் பக்கத்துத் திருவனந்தபுரம் தவிர, தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கேயும் போனதே கிடையாதே? எப்படிடா வருவேன்? என்னை விட்டுடு."

"உங்களைத் தனியா விட்டுப் போகமாட்டேன். நீங்க வந்தே ஆகணும்."

"ரெண்டு நாள் தா. ஆலோசிச்சுச் சொல்றேன்."

பால்ய சிநேகிதன் ஹரியோடு பேசினேன். அவன் சொன்னான், "நம்ம ஊர்ல என்னடா இருக்கு? நம்ம வயசுக்காரங்கள்லே நாமும், சாமிநாதனும்தான் மிச்சம். இந்தக் காலத்துல பசங்க அப்பா, அம்மாவை வெச்சுக் காப்பாத்தறதே ஆச்சரியம். உனக்கு, மகன், மருமகள் ரெண்டு பேருமே பிரியமாக் கூப்பிடறாங்க. தயங்காமப் போயிடு."

மணிக்கும், கலாவுக்கும் ஒரே சந்தோஷம். "யூ ஆர் கமிங் வித் அஸ் தாத்தா" என்று ஆதித் கட்டிக்கொண்டான். என்னவென்றே புரியாமல் குழந்தை ஆத்யாவும் Huggy தந்தாள்.

ஆமாம், அறுபத்து ஐந்து வயது மரம், தன் வேர்களைப் பெயர்த்துக்கொண்டு அமெரிக்காவில் வேரூன்ற முடிவெடுத்துவிட்டது. ஹரி, பழையாறு, நாகராஜா கோவில், மணிமேடை ஜங்ஷன் எல்லாத்துக்கும் டாட்டா சொன்னேன். நாகர்கோவிலுக்குத் திரும்பிவருவேன் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

அமெரிக்கா வந்துவிட்டேன். மணியும், கலாவும் எனக்காக லீவு எடுத்திருந்தார்கள். ஆதித், ஆத்யா டே கேர் போகவில்லை. நாள் முழுக்க அரட்டை, குழந்தைகளோடு விளையாட்டு. பெரிய வீடு. சுற்றிலும், சிகப்பு, வெள்ளை, மஞ்சள் எனப் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள். ஒவ்வொரு பூவும் பெரிசு பெரிசாய்… நாகர்கோவில் கலைவாணர் பூங்காவில்கூட இத்தனை தினுசு இத்தனை பெரிசு கிடையாது. வீட்டின் பின்புறம், பிள்ளைத்தாய்ச்சி போல் ஆரஞ்சு, ஆப்பிள் மரங்கள். ரோஜாக்களைத் தொட்டுத் தடவுவேன். ஆப்பிளை மரத்திலிருந்து பறித்துச் சாப்பிடுவேன். அனுபவம் புதுமை. அமெரிக்கா சொர்க்கமாக இருந்தது.

இரண்டு வாரங்கள் ஓடின. மணி சொன்னான், "அப்பா, நாளை முதல் நானும், கலாவும் ஆபீஸ் போகணும். ஆதித், ஆத்யாவுக்கும் கிரெஷ் ஸ்டார்ட்டிங்."

மறுநாள் காலை. ஆறு மணிக்கே வீடு அல்லோல கல்லோலப்பட்டது. பச்சைக் குழந்தைகளை அரைத் தூக்கத்தில் எழுப்பினார்கள். ஏழரை மணிக்கு எல்லோரும் ரெடி. காலையில் மணி குழந்தைகளை டே கேரில் விடுவானாம், மாலை ஆறு மணிக்குக் கலா கூட்டிக்கொண்டு வருவாளாம். இப்படிப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் ஏற்பாடு.

புறப்படும்போது மணி சொன்னான், "அப்பா, இந்த ஏரியா பத்திரமானதுதான். ஆனால், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்."

"அப்படீன்னா…!"

"யாராவது கதவைத் தட்டினா திறக்காதீங்க. நான் சன் டிவி, ஜெயா டிவி, ஹீரோ டாக்கீஸ் கனெக்‌ஷன் எல்லாம் வாங்கியிருக்கேன்."

எப்படி டி.வி. போடுவது, சினிமா பார்ப்பது என்றெல்லாம் விளக்கினான். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மட்டும் தனியாய். ஒரே நிசப்தம். என்னை அறியாமலே மனம்முழுக்கப் பயம். வாழ்க்கையில் இத்தனை நிசப்தத்தை நான் அனுபவித்ததே கிடையாது. ஒழுகினசேரியில், குழந்தைகள் விளையாட்டு, அக்கம் பக்கப் பெண்களின் அரட்டை, ஆண்களின் அரசியல் விவாதங்கள், டிவி அலறல் என்று கிராமமே அதிரும். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். ரோட்டில் கார்கள்கூட அதிகம் காணவில்லை. மனிதர்களே இல்லாத அத்துவானக் காட்டில் என்னை யாரோ விட்டுப்போனதுபோல் வெறுமை.

வயிறு பசித்தது. டேபிள்மேல் காலைக்கு இட்டிலி, மதிய உணவு, ஃபிளாஸ்க் நிறையக் காப்பி. மருமகள் கலா அன்போடு சமைத்துவைத்துப் போயிருந்தாள். எனக்கு ஒரு குணம். தானாகவே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடுவது நான் வெறுக்கும் சமாச்சாரம். இதற்கு முக்கிய காரணம் என் தர்மபத்தினி சரோஜாதான். கல்யாணம் ஆகும்வரை அம்மா பரிமாறுவாள். அப்புறம் அத்தனை நாளும் சரோஜாதான். சில கல்யாணங்களில் பஃபே விருந்து இருக்கும். அங்கேயெல்லாம் சரோஜாவே தட்டில் போட்டு எனக்குத் தந்துவிடுவாள்.

இட்டிலி சாப்பிடத் தொடங்கினேன். நானே எடுத்துச் சாப்பிடும்போது, ஒவ்வொரு விள்ளலும் தொண்டைக்குக் கீழ் இறங்க மறுத்தது. டிவி போட்டேன். அதுவும் போரடித்தது. படுத்தேன். என்னை அறியாமலே தூங்கிவிட்டேன். மதியம். கடனே என்று சாப்பாடு.

சாயந்தரம் வந்த கலா பதறிவிட்டாள்.

"மாமா, நீங்க சாப்பிடவேயில்லையே? உப்பு, காரம் ஏதாவது அதிகமாகப் போட்டுட்டேனா? உங்க உடம்பு சரியா இருக்கில்ல?"

"இல்லம்மா. உன் சமையல் சூப்பர். என் உடம்பும் நல்லாத்தான் இருக்குது. ஏதோ ஊர் நினைப்பு."

கலா அப்புறம் மணியோடு வந்து பேசினாள்.

"உங்களுக்கு போரடிக்குதுன்னு நினைக்கிறேன். ஸில்வன் பார்க் பக்கத்தில்தான் இருக்குது. நடக்கிற தூரம்தான். இந்தச் சனி, ஞாயிறு உங்களைக் கூட்டிட்டுப் போய்க் காட்டறேன். நீங்க தினமும் சாயந்தரம் போகலாம்."

சனி, ஞாயிறு போனேன். நிறைய இந்தியக் குடும்பங்கள். ஆதித், ஆத்யாவோடு பந்தைத் தூக்கிப்போட்டு விளையாடினேன். ஜாலியான நேரங்கள்.

தினமும் ஸில்வன் பார்க் போகத் தொடங்கினேன். ஒரே ஒரு பிரச்சனை. வீட்டைப் பூட்டினோமா என்று சந்தேகம். இழுத்து, இழுத்துப் பார்ப்பேன். சாவியைப் பத்திரமாக வைத்துக்கொண்டிருக்கிறோமா என்று மனசு வேகமாக லப், டப் அடிக்கும். அடிக்கடி சட்டைப் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கொள்வேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன், டென்ஷன்.

அமெரிக்காவில் காலெடுத்து வைத்தாலே வாழ்க்கை எந்திரகதி ஆகிவிடும் போலிருக்கிறது. திங்கள் டு வெள்ளி டிவி, ஸில்வன் பார்க்: சனி, ஞாயிறு சன்னிவேல் கோவில், காஸ்ட்கோ போய் மளிகைச் சாமான்கள், நம்மூர் ஹோட்டலில் சாப்பாடு.

இரண்டு மாதத்தில் அமெரிக்கா வெறுத்துவிட்டது. அதிலும், ஸில்வன் பார்க்கில் பெரும்பாலும் வருபவர்கள் இந்தி, தெலுங்குக்காரர்கள். ஆங்கிலம் தெரிந்தாலும், இந்தி, தெலுங்கு பேசினார்கள். எனக்கு இரண்டுமே சுட்டுப்போட்டாலும் புரியாது, வராது. ஒரு வயதான தமிழ்த் தம்பதியைப் பார்த்தேன். சிரித்தேன். பதிலுக்குச் சிரித்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னார்கள். அப்புறம், நான் பக்கத்தில் நிற்பதையே மறந்துவிட்டு, அவர்களுக்குள் பேசத் தொடங்கினார்கள். நான் நகர்ந்தேன்.
பார்க் கிரவுண்டில் நான் போகும்போதெல்லாம் சின்னப் பையன்கள் ஸாக்கர் விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதுதான் என் பொழுதுபோக்கு. அதேநேரம், மனக்குரங்கு எங்கெங்கோ அலைபாயும். வேலை வெட்டி இல்லாத மூளை சாத்தானின் கூடாரமாகும். அமெரிக்கா வந்ததே தப்போ, நாகர்கோவிலிலேயே இருந்திருக்கலாமோ, மணியும், கலாவும் என்னைக் கூட்டிக்கொண்டு வந்தது உண்மையாகவே என்மீது இருக்கும் பாசத்தாலா, அல்லது ஆதித், ஆத்யாவுக்கு விளையாட்டுப் பொம்மையாகவா? இப்படி நினைத்த சில நிமிடங்களிலேயே, இப்படிக் கீழ்த்தரமாகச் சிந்திக்கிறோமே என்று என்னையே திட்டிக்கொள்வேன்.

ஒரு வாரமாக ஒரு புதுப்பையன் வருகிறான். ஒன்பது, பத்து வயசு இருக்கலாம். பளிச் முகம். சூம்பிப்போன கால்கள். போலியோ பாதிப்பு. ஊன்றுகோல்களோடு மெள்ள நடந்து வருவான். உடையைப் பார்த்தால், அதிகம் வசதி உள்ளவனாகத் தெரியவில்லை. ஸாக்கர் மைதானம் அருகே ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருப்பான். தன்னால் விளையாட முடியவில்லையே என்னும் சோகம் அவனுக்குள் நிச்சயம் இருக்கவேண்டும். அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்ப்பான். ஆனால், ஏதோ தயக்கம் தெரியும். என்னிடம் பண உதவி எதிர்பார்க்கிறானோ? எதற்கும், கவனமாக இருப்பது நல்லது.

இன்று அந்தப் பையன் என்னருகே வந்தான்.

"தாத்தா, நீங்க தமிழா?"

"ஆமாம். ஏன்? நீ தமிழா?"

"ஆமாம். நான் உங்க பக்கத்திலே உட்காரலாமா? உங்ககூடக் கொஞ்சம் பேசணும்."

என் மனக்குறளி சொன்னது, "இந்தப் பயல் டாலர்தான் கேட்கப் போறான்."

"தாத்தா, என் பேரு கண்ணன். எங்க ஊரு தர்மபுரி."

"சேலம் பக்கத்தில் இருக்கிற ஊர்தானே?"

"ஆமாம். எங்க அப்பா ரொம்பக் குடிப்பாரு. என் மூணு வயசுலேயே இறந்து போயிட்டாரு. அம்மாதான் என்னை வளத்தாங்க. போன வருஷம், ஒரு கார் விபத்தில் அவங்க உயிர் போயிடிச்சு. ராமகிருஷ்ண மடம் சாமிகள் என்னைக் கூட்டிட்டுப் போய்ப் படிக்கவெச்சாங்க. அங்கே சாமிக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா வந்தாங்க. அரசாங்க அனுமதி வாங்கி என்னைக் கூட்டிட்டு வந்திருக்காங்க. நல்லாப் பாத்துக்கறாங்க. வீட்டிலே இங்கிலீஷ் சொல்லித் தர்றாங்க. சீக்கிரமே ஸ்கூல்லே சேப்பாங்க. நான் நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வருவேன்."

"ஆசீர்வாதம் தம்பி."

"நன்றி தாத்தா. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேக்கணும். தப்பா நினைக்க மாட்டிங்களே?"

ஒருவழியாப் பயல் பணந்தான் கேட்கப் போறான்.

"சொல்லுப்பா."

"நீங்க எப்பவும் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கீங்க?"

"ஏதோ நெனைப்புகள் தம்பி."

"தாத்தா. நான் அநாதை. கால் நடக்கமுடியாது. ஆனால், ராமகிருஷ்ண மடம் சாமியார் என்னைக் கிராமத்திலிருந்து கூட்டிட்டுப் போனது என் அதிர்ஷ்டம். சாந்தி அம்மா அமெரிக்காவுக்கு அழைச்சு வந்தது என் அதிர்ஷ்டம். இதை நெனச்சு, நெனச்சு, நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?"

"நெஜமாவா? எப்படிடா?"

அந்தப் பொடியன் என் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனை, என்னிடம் காசுக்குக் கையேந்தி வருகிறவனா நெனைச்ச நானெல்லாம் ஒரு மனுஷனா!

"ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி எனக்கு ஒரு கதை சொன்னார். மனசுலே வருத்தம் வர்றப்போ எல்லாம், அந்தக் கதையை நினைவுபடுத்திக்கச் சொன்னார்."

"என்னப்பா கதை அது?"

"ரொம்ப நாள் முன்னாடி, ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி. வைத்தியர்கள் வகை வகையா மருந்து கொடுத்தும் குணமாகலே. ஒரு ஜோசியர் வந்தார். ராஜா பச்சை நிறத்தை மட்டும் பாத்துக்கிட்டேயிருந்தா தலைவலி போயிடும்ன்னு சொன்னார். நாடு முழுக்கப் பச்சைப் பெயிண்ட் அடிச்சாங்க. நாட்டில் எல்லோரும் பச்சை டிரெஸ் மட்டுமே போடலாம்னு கட்டளையிட்டாங்க. ஆனா, குதிரை யானை, வானம் நிறங்களை மாற்ற முடியுமா? இவற்றை ராஜா சிலசமயம் பார்த்துவிடுவார். தலைவலியால் துடிப்பார். ராஜாவுக்குத் தெனாலிராமன் மாதிரி ஒரு விகடகவி. ஒரு சுலபவழி சொன்னார், நீங்க பச்சைநிறக் கண்ணாடி அணியுங்க. அப்புறம் நீங்க எதைப் பாத்தாலும், தலைவலி வராது. ராஜா அதைப் பின்பற்றினார். அவர் தலைவலி போயே போச்."

நான் பிரமிப்பில். சந்தோஷம் வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள்தான் இருக்கிறது. நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால், இனியெல்லாம் சுகமே என்னும் தத்துவம் இந்தக் குட்டிக்கதைக்குள்ளா?

"தாத்தா. லேட் ஆகுது. சாந்தி அம்மா தேடுவாங்க. வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் கட்டாயம் உங்க கதையைச் சொல்லுங்க."

ஊன்றுகோல்களின் டொக் டொக் சப்தம். திரும்பிப் பார்த்துக்கொண்டே போகிறான். எனக்குள் பிரம்மாண்டக் கேள்வி - இவன், வெறும் தர்மபுரிக் கண்ணனா, அல்லது கீதோபதேசக்காரரின் மறுபிறவியா?

வீட்டுக்கு வருகிறேன். என் நடையில் என்னை அறியாமலே, ஒரு துள்ளல். மணி வந்தவுடன், கலா அவனிடம் மெள்ளச் சொல்கிறாள், "ரொம்ப நாளைக்கு அப்புறம், மாமா இன்றைக்குச் சந்தோஷமா இருக்கார்."

நான் மகனிடம் போகிறேன்.

"மணி, பொழுதை வீணாக் கழிக்க எனக்குப் பிடிக்கலே. எங்கேயாவது பார்ட் டைம் வாலன்டியரா ஒர்க் பண்ண முடியுமா?"

"என் ஃபிரண்ட் முகுந்த் நிறைய சோஷியல் ஒர்க் பண்றான். அவன்கிட்டே சொன்னா, உடனே ஏற்பாடு பண்ணுவான். அது சரி, திடீர்னு ஏன் உங்களுக்கு இந்த யோசனை?"

சத்தியமான பதில் என்னை அறியாமலே வரத் துடிக்கிறது, 'நான் கண்ணாடியை மாத்திட்டேன்!'

இதைச் சொன்னால் மணிக்குப் புரியாது. வெளியே வரத்துடிக்கும் வார்த்தைகளை விழுங்குகிறேன். சிரிக்கிறேன். அப்பனுக்கும், மகனுக்குமிடையே புன்முறுவல்கள் ஆயிரமாயிரம் சேதிகள் சொல்லும்.

S.L.V. மூர்த்தி,
மௌன்டன்வியூ, கலிஃபோர்னியா
More

ஜவ்வாது
கத்தி
Share: 




© Copyright 2020 Tamilonline