Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்
நூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
சொந்தச்சிறை
செவிட்டு மணி
வெஜிடபிள் குருமா
- எல்லே சுவாமிநாதன்|ஜனவரி 2014||(1 Comment)
Share:
வீட்டுக்குள் நுழைந்ததுமே டெலிஃபோனில் மின்னிய மஞ்சள் மின்விளக்கு செய்தி வந்து பதிவாகியிருப்பதைக் காட்டியது.

என் மனைவி ஓடிப்போய் பட்டனை அமுக்க "ஈஸ்வரி பேசறேன். முக்கியமான விஷயம் சொல்லணும். வந்தவுடனே என்னைக் கூப்பிடு" என்றது.

ஈஸ்வரி சமூகத்தில் ஒரு முக்கியப் புள்ளி. எல்லாக் கொண்டாட்டமும் அவள் தலைமை, ஒத்துழைப்பு, ஆசியோடுதான் நடக்கும். அவள் கம்ப்யூட்டரில் எல்லோருடைய பிறந்த தேதி, கல்யாண நாள், சஷ்டியப்த பூர்த்தி இப்படிப் பல விஷயங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். சமயத்தில் சிலர் அவளுக்கு ஃபோன் போட்டு "ஈஸ்வரி எனக்கு பிறந்தநாள் எப்ப?" என்றும் கேட்பார்கள். அவளும் சளைக்காமல் "இங்கிலீஷ் தேதியா, தமிழ்தேதியா, நட்சத்திரப்படியா" என்று கேட்டு விவரம் சொல்லுவாள்.

என் மனைவி ஈஸ்வரியைத் தொடர்பு கொண்டதில், அவள் அழைத்த விஷயம் பானுவின் ஐம்பதாவது பிறந்தநாள் பற்றியாம். பானுவுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்க நினைத்து அவள் ஏற்கனவே ஈமெயில் போட்டிருந்தாள். இப்போது பானுவின் அம்மாவுக்கு இந்தப் பார்ட்டியில் கலந்துகொள்ளப் பிடிக்கவில்லையாம். பானு இல்லாத நேரமாக பானுவின் அம்மாவைப் பார்த்து பார்ட்டிக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளச் சொன்னாள்.

"பானுவோட அம்மாகிட்ட பேசறதுக்கு நீங்களும் என்னோட வரணும்" என்றாள் என் மனைவி கெஞ்சலுடன். என்னையும் மதித்துத் தன்கூட வரச் சொல்கிறாளே என்று எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

"அவங்க வீட்ல ஒரு பயங்கர நாய் இருக்கு. அதான் உங்களையும் என்னோட கூட அழச்சிண்டு போயி முதல்ல உங்களை உள்ள போகச் சொல்லிட்டு..." என்றவுடன் என் கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

நல்ல வேளையாய் நாங்கள் பானு வீட்டுக்குப் போன தினம் நாய் கொல்லையில் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. தைரியமாய் அழைப்பு மணியை அடித்தோம்.

கையில் ருத்ராட்ச மாலையோடு வெளியே வந்த பானுவின் அம்மா எங்களை உள்ளே அழைத்து உட்காரக்கூடச் சொல்லாமல், "என்ன விஷயம்? நான் பூஜையில இருந்தேன்" என்றாள்.

"உங்க பெண்ணுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி பத்தித்தான் பேச வந்தேன். நீங்க வரலேன்னா நல்லா இருக்காது. நீங்களும் இதில அவசியம் கலந்துக்கணும்" என்று என் மனைவி தொடங்கினாள்.

"ஏற்கனவே ரெண்டு மூணு பேரு இதைப்பத்தி எங்கிட்ட பேசியாச்சு. இது எனக்குச் சுத்தமாப் பிடிக்கல. விளக்கை ஊதி அணைக்கறதாம், கேக்கை வெட்றதாம். விளக்கை ஏத்தறதுதான் மங்களகரம். அதை ஊதி அணைக்கிறது மகா பாபம். அம்பது வயசு ஆறது பெரிய விஷயமா? ஏதோ பிறந்த நாள்னா கோயில்ல போயி சாமி கும்பிட்டு அர்ச்சனை அபிஷேகம்னு பண்ணினா போதுமே. ஏதுக்கு ஊரு கூடிக் கண்டதைத் தின்னுட்டு காட்ரே மூட்ரேனு பஞ்சாபி டான்ஸ் ஆடணும்? பூஜை பஜனைன்னு பக்தி மார்க்கத்தில போகாம நம்ம ஜனங்களே மாறிடுத்து. என்ன நான் சொல்றது சரிதானே?" என்று பானுவின் அம்மா கேட்டாள்.

"நீங்க சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்குனு தோணறது" என்று என் மனைவி தொடங்க, இதை இப்படியே விட்டால் வந்த காரியம் உருப்படாது என்று நான் பேச ஆரம்பித்தேன்.

"இத பாருங்கம்மா. அம்பதாவது அறுவதாவது பிறந்த நாள், திருமணநாள்னு சொல்றதெல்லாம் சும்மா பேருக்கு. நமக்கு ஐம்பது பேரோட கொண்டாட ஏதாவது ஒரு காரணம் வேணும் இல்லியா? குழந்தைகள் பெரியவா எல்லாம் கூடிப் பேசிச் சாப்பிட்டா ஜாலியா இருக்குமே? உங்களுக்கு இதில தனிப்பட்ட முறையில என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க. போதும்" என்றவுடன்,

"கொண்டாடறதுல எனக்கு ஒண்ணும் இல்ல. பார்ட்டி அன்னிக்கி நான் காலையிலேயே போய் ஸ்வேதா வீட்ல இருந்துட்டு பார்ட்டிக்கு வரணுமாம். எனக்கு சாப்பிட்டா சித்தக் கண்ணசர ஒரு மணி தூங்கணும். அவள் மாமனார் வேற இருக்கார். சின்ன இடம். அங்க இருக்க சரியா வராது."

"கவலைப் படாதீங்க. உங்களுக்குத் தூங்க வசதியா வேற இடம் பார்க்கச் சொல்றேன். பஞ்சாபி டான்சுக்கு பதிலா வேற ப்ரோகிராம் பண்ணச் சொல்றேன். நீங்க வந்து சாப்பிட்டுட்டு ஆசீர்வாதம் பண்ணினாப் போதும்."

"ஆ....எல்லா பார்ட்டிக்கும் எங்க போனாலும் இந்த கோஹினூர் ஓட்டல்காரன் சாப்பாடுதான். காஞ்ச ரொட்டியும் சன்னா மசாலாவும் தின்னு தின்னு அலுத்துப் போச்சு. இத்தனை பெண்கள் இருக்கோமே. ஆளுக்கு ஒரு டிஷ் பண்ணிண்டு வந்து ஜம்முனு கூடிச் சாப்பிடலாமே. இல்லாட்டி நான் எனக்கு மட்டும் கொஞ்சம் உப்புமா கிளறிண்டு வரவா?"

"உப்புமா எல்லாம் வேண்டாம். பாட்லக் நல்ல ஐடியா. ஈஸ்வரிகிட்ட சொல்றேன்" என்று என் மனைவியின் கண்களைப் பார்க்காமலே சொன்னேன். அதிலே தகிக்கும் வெப்பத்தைத் தாங்கும் சக்தி எனக்கில்லை.

"அப்ப எல்லாம் சரிதானே. உங்க பெண்கிட்ட மட்டும் சொல்லிடவேண்டாம். சர்ப்ரைஸ் போயிடும்" என்றேன்.

"நான் சொல்ல மாட்டேன். ஆனா அவளுக்கு நிஜமாவே சர்ப்ரைஸானு தெரியாது. ஏற்கனவே அவள் ஹேர் டிரசரெல்லாம் கூப்பிட்டு பார்ட்டி அன்னிக்கி காலையில ஹேர்ஸ்டைல் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கா. அய்யோ, மணி பன்னண்டு ஆயிடுத்தா? இன்னும் அரைமணியில டிவியில ஜூனியர் கர்நாடிக் சிங்கர் புரோகிராம் வர டைம். நான் சீக்கிரமா பூஜையை முடிச்சிட்டு...."

குறிப்பறிந்து விடைபெற்று வீட்டுக்கு வந்து ஈஸ்வரியுடன் தொடர்பு கொண்டோம்.

ஈஸ்வரிக்கு பாட்லக் ஐடியா பிடித்துவிட்டது. "எனக்கே கோஹினூர் ஓட்டல் சாப்பாடு அலுத்துடுத்து. நானே பாட்லக் மெனு போட்டு யாருக்கு என்ன டிஷ்னு தனித்தனியா மெயில் அனுப்பிடறேன்" என்றாள்.

மறுநாள் ஈமெயில் வந்ததும் என் மனைவி கத்தினாள்.

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டின்னு ஆயிட்டுது. நீங்க ஐடியா குடுத்ததால எனக்கு ஈஸ்வரி என்ன வேலை குடுத்துருக்கா பாருங்க. நான் பார்ட்டிக்கு ‘கர்மா’ செய்யணுமாம். நல்ல டிஷ் பண்றவங்களுக்கு ஒரு பரிசும் உண்டாமே. என்ன கர்மா கருமம் இது? நான் கேள்விப்பட்டதேயில்லயே!"

நான் போய்ப் பார்த்து "அது கர்மா இல்ல. குருமா. ஆளுக்கு ஆள் இஷ்டத்துக்கு ஸ்பெல்லிங் போடராங்க" என்றேன்.

"அய்யோ. சிக்கன், மட்டன் குருமா மாதிரியா. நாம் சைவம்னு ஈஸ்வரிக்கு தெரியாதா? நல்ல ஆளு பாத்தா இந்தச் சனியன் பண்றதுக்கு. மெயிலை டெலீட் பண்ணிடறேன். மெயிலே வரலேன்னு சொல்லிடலாம்" என்று சொல்லி அதை உடனே நீக்கவும் செய்தாள்.

"டெலீட் பண்ணி பொறுப்பைத் தட்டிக் கழிக்கறது தப்பு. எல்லோரும் இப்படிப் பண்ணினா என்ன ஆகும்? வெஜிடபிள் குருமா பண்ணலாம். சென்னையில அந்த ஓட்டல்ல சாப்பிட்டமே நினைவு இருக்கா?"

"அதை யாரு பண்றது? எப்படிப் பண்றது? கடையில கிடச்சா வாங்கி எடுத்துண்டு போகலாமா?"

"பாட்லக்னா நாம் பண்றதுதான் முறை. எனக்குப் பண்ணத் தெரியும்" என்றதும் முகத்தில் ஒளிபொங்க, "அப்டின்னா சரி. ஆனா ஒண்ணு சொல்வேன். இதை நீங்க பண்ணிக் குடுத்த சேதி நமக்குள்ள ரகசியமா இருக்கணும். நான் தான் என் பெண்டாட்டிக்கு குருமா பண்ணிகொடுத்தேன்னு அங்க வந்து தம்பட்டம் அடிச்சிக்கப்படாது. சரியா?"

நான் சம்மதித்தேன்.

மறுபடியும் ஈஸ்வரி அழைத்தாள். "பார்ட்டிக்கு ரெண்டு இடம் தற்காலிகமா சொல்லி வெச்சிருந்தேன். அட்வான்ஸ் கொடுக்கலை. பானு அம்மா பண்ணின லொள்ளுல, டிலே ஆகி இப்ப இடம் போயிடுத்து. உங்களுக்குத் தெரிஞ்ச இடம் ஏதும் இருக்கா? பார்த்து சொல்ல முடியுமா?" என்றாள்.

மறுநாள் அலுவகத்திலிருந்து சில இடங்களுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன். சரியாக எதுவும் அமையவில்லை. தவிர "இந்தியன் பார்ட்டி என்றாலே தரமாட்டோம். சாதம், சப்பாத்தி, கோக் கேன் என்று குப்பைக்கூடையைச் சுத்தி போட்டுவிட்டு இடத்தை நாற அடித்து விடுகிறார்கள்" என்று புகாரும் செய்தார்கள்.

எங்கள் ஆஃபீஸ் செக்ரட்டரி கிளாரா இதைப் பார்த்துவிட்டு, "நான் இருக்கிற காண்டோவில் கம்யூனிடி ஹால் இலவசமா கிடைக்கும். புக் பண்ணித் தரவா" என்றாள். உடனே செய்தும் கொடுத்தாள்.

நான் மிகுந்த நன்றி உணர்வுடன் "ஒரு சர்ப்ரைஸ் பர்த் டே பார்ட்டி வெச்சிக்கப் போறோம். நீயும் உன் பையன்கள் ஜான், ஜார்ஜுடன் சாப்பிட வாயேன்" என்று அழைக்க, அவள் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டாள்.

பார்ட்டி அன்று மாலை ஹாலில் விளக்கை அணைத்துவிட்டு அனைவரும் காத்திருந்தோம்.
மேஜை மேலிருந்த பானுவுக்கான கேக்கின் மேல் ஐம்பதைக் காட்ட, "5" போலவும் ’0’ போலவும் இரண்டு மெழுகுவத்திகள் இருந்தன. லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு வாரியம் ஐம்பது மெழுகுவத்திகளை ஏத்தி வைக்க அனுமதி தருவதில்லை என்பதால் இந்த ஏற்பாடாம்.

அவரவர்கள் கொண்டுவந்த உணவு அலுமினம் ட்ரேயில் வைத்து மூடப்பட்டிருந்தது. அதற்கு செய்தவர் பெயருக்குப் பதிலாக பக்கவாட்டில் ஒரு சீட்டில் நம்பர் எழுதி ஒட்டி வைக்கப்பட்டது.

"ராஜன் பானுவோடு வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார், வந்தே விட்டார்" என்று காதில் செல்ஃபோனோடு ஈஸ்வரி ரன்னிங் காமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ராஜனும் பானுவும் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் "சர்ப்ரைஸ்" என்று கத்தினார்கள். பானு ஆச்சரியமும் அதிர்ச்சியும் காட்டி வாயைப் பிளக்க, எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள்.

ஹேப்பி பர்த் டே பாட்டுக்குப் பிறகு பானு கேக் வெட்டினாள். எல்லோரும் கை தட்டினார்கள். தொடர்ந்து ஒரு சின்ன கலைநிகழ்ச்சியும் நடந்தது. சின்னப் பெண்கள் வந்து அழகாய்க் கும்மி அடித்தார்கள். ஒரு நடனமணி "எல்லாம் இன்ப மயம்" என்று காசெட்டில் ஒலித்த பாட்டுக்கேற்ப ஆடி மகிழ்த்தினாள்.

ஈஸ்வரி எல்லோரையும் உணவுக்கு அழைத்தாள்.

"இது பாட்லக். யார் என்ன செய்தார்கள் என்பது இப்ப தெரியாது. உங்களுக்கு மிகவும் பிடித்த உணவிருக்கும் பாத்திரத்தில் ஒட்டியுள்ள நம்பருக்கு ஓட்டுப் போடுங்கள். ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான். போட வசதியாய் இங்கே பெட்டியும் பேப்பர் பென்சிலும் இருக்கு. முதலில் குழந்தைகள் சாப்பிடட்டும். அப்புறம் பெரியவர்கள் போகலாம். பானுவுக்கு நீங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களை இந்த ஓரத்தில் வையுங்கள்" என்று அறிவித்தாள்.

கிளாராவின் குழந்தைகளையும் சாப்பிடப் போகச் சொல்லிவிட்டு, கிளாராவை பானுவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். "இவளாலதான் நமக்கு ஹால் கிடச்சிது" என்றேன். "ஓ கிளாரா நீ டெக்சஸ்ல என்னோட படிச்சவதானே. இங்கியா இருக்கே" என்று பானு சொல்ல "வாட் அ சர்ப்ரைஸ் பானு!" என்று கிளாரா மகிழ்ந்து அவளைத் தழுவ நான் ஓரங்கட்டப்பட்டேன்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள். நான் செய்த குருமா தீர்த்துவிட்டது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

செக்யூரிடி ஆள் வந்து ஈஸ்வரியிடம் ஏதோ சொன்னான். உடனே ஈஸ்வரி, "நண்பர்களே....நமக்கு ஹாலை பயன்படுத்தக் கொடுக்கப்பட்ட நேரம் இரவு பத்து மணி வரைதான். இப்போது ஒன்பது ஐம்பதானதால் சீக்கிரம் முடிக்க வேண்டும். நீங்கள் சிறந்த உணவுக்குப் போட்ட ஓட்டுகளை எண்ணிவிட்டேன். எல்லோராலும் அதிகமாய் விரும்பப்பட்ட உணவு வெஜிடபிள் குருமா. தயாரித்தவர் ஸ்வேதா சிவராமன். ஸ்வேதாவுக்கு இந்த ரைஸ் குக்கரை பரிசாகக் கொடுக்கிறேன்" என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஸ்வேதா, மான் மாதிரி குதித்து ஓடிவந்து ‘தேங்யூ தேங்யூ’ என்று உரக்கக் கத்தி பரிசை வாங்கி கொண்டாள். எல்லோரும் கைதட்டினார்கள். என் மனைவியைப் பார்த்தேன். அவளும் பலமாகக் கைதட்டிக் கொண்டிருந்தாள்!

மெதுவாகக் கூட்டம் கலைந்தது. காருக்குக் காத்திருந்த பானுவிடம் "சர்ப்ரைஸ் எப்படி பானு, உனக்குப் பிடிச்சிதா?" என்றாள் ஈஸ்வரி.

"தேங்க் யூ. நல்லா இருந்துது. ஒண்ணா, ரெண்டா ஏகப்பட்ட சர்ப்ரைஸ். ராஜன் என்னைக் கோயிலுக்குப் போகலாம்னு சொன்னதே சர்ப்ரைஸ். கோயில்ல பட்டர் வேற என்ன ஏதாவது சர்ப்ரைஸ் பார்ட்டியான்னு கேட்டார். எப்டிச் சொல்றீங்கன்னேன். இப்பல்லாம் சண்டே ஈவினிங்ல சர்ப்ரைஸ் அது இதுன்னுதான் ஆளு வந்து தலையக் காட்டிட்டு ஓடிடரா. அதுவும் கோயிலுக்கே வராத ராஜன் சார் இன்னிக்கு வந்திருக்கறது இதுக்குத்தான்னு தெரியறதுன்னார். இந்த ஹாலில உள்ளே நுழயறதுக்குள்ள வெளியில இருந்த செக்யூரிடி கார்டு சர்ப்ரைஸ் பார்ட்டி நடக்கப்போற ஹால் இந்தப் பக்கம்னு சொன்னது ஒரு சர்ப்ரைஸ். இங்க கிளாராவைப் பார்த்தது பெரிய சர்ப்ரைஸ். ஸ்வேதாவோட அசத்தல் குருமா மிகமிகப் பெரிய சர்ப்ரைஸ்."

இதைக் கேட்டதும் எனக்குள் ஒரு பொறாமைத்தீ எரிந்தது. இருக்காதா? அடுப்படியில நான் ரெண்டு மணி வெந்து செய்த பண்டம் அல்லவா அது? ஒரு வேளை ஈஸ்வரி சொல்லி ஸ்வேதாவும் குருமா கொண்டு வந்தாளோ? நான் அதை கவனிக்கத் தவறிவிட்டேனோ? அது நான் செய்ததைவிட நன்றாக இருந்ததோ? ஈஸ்வரியிடம் தனியாகக் கேட்கலாம் என்று தோன்றியது.

காரில் வீட்டுக்குப் போகும்போது என் மனைவியிடம் "குருமாக்கு எப்படி ஸ்வேதாவுக்கு ரைஸ் குக்கர் பரிசு கிடைக்கலாம்? உனக்குன்னா அது வரணும். என்னாச்சுனு ஈஸ்வரியைக் கேளு" என்று சொன்னேன். இவளை முடுக்கிவிட்டு விட்டால் ஈஸ்வரியிடம் இவள் கத்தற கத்தலில் அவள் உடனே ஓடிப் போய் இவளுக்கென ஒரு ரைஸ் குக்கர் பரிசாய் வாங்கிக் கையில் கொடுத்தால்தான் அடங்குவாள் என்பது என் நம்பிக்கை..

ஆனால் அவள் புத்தர் போல முகத்தை அமைதிச் சின்னமாய் வைத்துக் கொண்டு, "நான் கேக்கமாட்டேன். ஏன்னா ஸ்வேதாவுக்கு கிடைச்ச சீப் ரைஸ் குக்கர் ஒரு குப்பை. அது எனக்குப் பர்த்டேக்கு ருக்மிணி பரிசா கொடுத்தது. நான் அதை ஈஸ்வரி பிறந்த நாளுக்கு பரிசாக் குடுத்துட்டேன். அதை அவள் இன்னிக்கு நைசா ஸ்வேதாக்கு கொடுத்துட்டாள். அதோட இல்லாம, இதில் குருமா செஞ்சது நான்தான்னு சொல்லிண்டா அந்தக் குக்கர் எனக்கே திரும்பி வந்திடும். தவிர, இனிமே வர பார்ட்டில எல்லாம் எனக்கு குருமா செய்யற வேலை கொடுத்திடுவா. எல்லாரும் எங்கிட்ட ரெசிப்பி வேற கேட்பா. வீட்டுக்கு வந்து எனக்குக் குருமா பண்ணிக் காட்டும்பா. இதெல்லாம் எனக்குத் தேவையா? அதான் நான் வாயைத் திறக்கலை" என்றாள்.

பார்ட்டி அதோடு முடிந்து விட்டதுதான். ஆனால் சில மர்மங்கள் மறுநாளில் மெதுவே வெளியாயின.

திங்களன்று அலவலகத்தில் கிளாரா தன்னை பார்ட்டிக்கு அழைத்தமைக்கும் அருமையான உணவுக்கும் நன்றி சொன்னாள். "என் பையன்களுக்கும் சாப்பாடு பிடிச்சிது. ஜான் சின்னதா ஒரு குழப்பம் பண்ணிட்டான்னு ஜார்ஜ் சொன்னான். சாப்பாடு எடுக்கிற அவசரத்தில ட்ரே மெலே ஒட்டியிருந்த ரெண்டு நம்பர் பேப்பர் கீழ விழுந்திடுத்தாம். எடுத்துக் கிடச்ச பாத்திரத்தில ஒட்டிட்டாங்களாம். டிஷ் மாத்தி ஒட்டியிருக்கலாம் போல. இதனால பிரச்னை ஏதும் இருக்காது இல்ல?" என்று வேறு சொன்னாள்.

ஆகா. இதானா? ஜான் பண்ணின சில்மிஷத்தால என் மனைவி நம்பரும் ஸ்வேதா நம்பரும் மாறிவிட்டது!

ஒருவேளை ஸ்வேதாவும் குருமா கொண்டு வந்தாளா? சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள. ஸ்வேதாவை ஃபோனில் அழைத்தேன். வீட்டில் அவள் மாமனார்தான் இருந்தார்."ஸ்வேதா குருமாவுக்கு பரிசு வாங்கினதுக்கு வாழ்த்துகள்" என்று ஒப்புக்குச் சொன்னேன்.

அவர் உடனே "இது ஏழாவது ஆளு நீங்க. ஸ்வேதா எங்க குருமா கொண்டு போனா? அவளுக்கு பச்சடி பண்ணுன்னு ஈஸ்வரி சொன்னா. இவள் பச்சடின்னா என்னனு கேட்டா. நான்தான் வெள்ளரிக்காப் பச்சடி பண்ணிக் குடுத்தேன். எடுத்திண்டு போனாள். இப்ப என்னடான்னா தனக்கு குருமாவுக்குப் பரிசு கொடுத்தாங்கங்கிறா. நான் என்ன டிஷ் பண்ணிக் கொடுத்தேன்னே இந்தப் பெண்ணுக்கு இன்னமும் விளங்கல. இந்த அழகில குருமா ரெசிப்பி கேட்டு நிறைய ஃபோன் வருது. ஒண்ணும் புரியல எனக்கு" என்று அங்கலாய்த்தார்.

ஈஸ்வரியை ஃபோனில் அழைத்தேன். "பாட்லக்ல யாருக்கு என்ன செய்யணும்னு அனுப்பின மெயில் உங்ககிட்ட இருக்கில்லயா? அதில குருமா செய்யச் சொன்னது யாரைன்னு..."

"சார். அந்த மெயில் எல்லாம் நான் நேத்து ராத்திரியே டெலீட் பண்ணியாச்சு. இப்ப புதிசா நான் ஒர்க் பண்ற சர்ப்ரைஸ் பார்ட்டி புவனா சங்கரனுக்கு கிரீன் கார்டு கெடச்சதுக்கு. உங்களுக்கும் ஈமெயில் வரும்" என்று சொல்லிவிட்டாள்.

உழைத்தவனுக்கு புகழில்லை, பரிசில்லை, கண்டு கொள்வாரில்லை. சே, என்ன உலகமடா இது. குருமா ரெசிப்பி வேண்டுபவர்கள் எனக்குத் தனிமடல் போடுங்கள்..... இதோ மெயில் ஐடி: வெஜ்ஜிகுர்மா அட் சப்பாத்திசப்ஜி டாட் காம்.

எல்லே சுவாமிநாதன்
More

சொந்தச்சிறை
செவிட்டு மணி
Share: 




© Copyright 2020 Tamilonline