தெரியுமா: கணித, அறிவியல் மேதை பாஸ்கரர்
பாரதத்தில் பண்டைய நாட்களில் பலப்பல கணித மேதைகளும் விஞ்ஞானிகளும் இருந்துள்ளனர். சக்ரவர்த்தி விக்கிரமாதித்தரின் அரசவையில் வானியல் நிபுணர் வராஹமிஹிரர் பைனாமியல் குணகங்கள் (binomial co-efficients) போன்றவற்றைக் கண்டுபிடித்தார். ஆர்யபட்டா, கெப்ளருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கிரகங்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருவதைக் கண்டறிந்தவர். கிரகணம் எப்போது ஏற்படும் என்பதைச் சரியாகக் கணித்தார். இந்த வரிசையில் மிகமுக்கியமான இடத்தைப் பிடித்தவர் பாஸ்கராசார்யர்.

பாஸ்கராசார்யரின் மூதாதைகளில் ஒருவர் விக்கிரமாதித்தனுக்குப் பிறகு உஜ்ஜயினி சாம்ராஜ்யத்தை ஆண்ட போஜராஜனின் சபையில் அங்கம் வகித்தவராம். இவரது சந்ததிகள் தென்புலம் பெயர்ந்தனர். பாஸ்கரர் கர்நாடகாவில் தற்போதைய பீஜப்பூர் நகரம் உள்ள பகுதியில் கி.பி. 1114 ஆண்டு பிறந்தார்.

பாஸ்கரரின் சாதனைகள்
இளமையிலேயே கணித ஆர்வம் கொண்டிருந்த பாஸ்கரர், கணிதத்தை எளிதில் கற்பித்ததோடு அதற்கெனப் பல பாடநூல்களையும் எழுதினார். இவரது மகள் லீலாவதி இளவயதிலேயே விதவையாகவே, அவள் மனமுடையாமல் ஈடுபடுவதற்காகக் கணிதப் புதிர்களை உருவாக்கினார். அவள் பெயரிலேயே 'லீலாவதி' என்ற கணிதப்புதிர்கள் கொண்ட நூலையும் இயற்றினார்.

பாஸ்கரர் முக்கோணவியல் (trigonometry), இயற்கணிதம் (algebra), வானியல் (astronomy) போன்ற பல துறைகளிலும் கண்டுபிடித்து எழுதிய வானியல் மற்றும் கணிதக் கோட்பாடுகள், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டன. உதாரணமாக, கோள வடிவியலில் (spherical geometry) பாஸ்கரர் நிர்ணயித்த அடிப்படைக் கோட்பாடுகளைக் கூறலாம். மேலும் புவியீர்ப்புச் சக்தியால் கிரகங்கள் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன என்பதை பாஸ்கரர் சுட்டிக் காட்டினார். அவர் பூமியின் சுற்றளவை 99 விழுக்காட்டுக்குமேல் துல்லியமாகக் கணித்தார். இவற்றின் காரணமாக அவர் உஜ்ஜயினியின் வானியல் ஆய்வுமையத்தின் (astro research observatory) தலைவராக அமர்த்தப்பட்டார்.

பாஸ்கரர் மற்றும் அவரது வழிபற்றிய கணித விஞ்ஞானிகளின் முயற்சிகளால், இடைக்காலத்தில் விஞ்ஞான உணர்வு பரவியது. லீலாவதி என்ற பெயரில் ஒரு வடிவியல் கணிதநூலும், பீஜகணிதம் என்ற பெயரில் அல்ஜீப்ரா நூலும் படைத்தார் பாஸ்கரர். அவர் கி.பி.1185ம் ஆண்டு இயற்கை எய்தினார். மொகலாய சக்ரவர்த்தி அக்பர், பாஸ்கரரின் நூல்களைப் பாரசீக மொழியில் பெயர்த்து அக்கோட்பாடுகளை உலக அளவில் பரவச்செய்தார். பாஸ்கரர் மறைந்து எழுநூறு ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது நூல்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டு இந்தியாவில் பணிபுரிந்த ஆங்கிலேய அறிஞர்கள் வியப்புற்றனர்!

இத்தகைய மகத்தான மேதையின் நினைவாக இந்தியா ஒரு விண்வெளிக் கோளுக்கு அவரது பெயரைச் சூட்டியது. ஜனவரி 31, 2015 அன்று சாரடோகாவில் பாஸ்கரரின் 900வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி குறித்து வாசிக்க

கதிரவன் எழில்மன்னன்,
சாரடோகா

© TamilOnline.com